ஆண்களை விட பெண்கள் முன்னேறி வருகின்றனர்: ராணுவத்தில் பேதம் பார்க்கக்கூடாது...மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரன்ஜன் சவுத்ரி கருத்து

டெல்லி: ராணுவத்தில் ஆண், பெண் என்ற பேதம் பார்க்கக்கூடாது என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரன்ஜன் சவுத்ரி கருத்து தெரிவித்துள்ளார். ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள்  மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். உயர் பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த  பதில் மனுவில்; குடும்பப் பராமரிப்பில் பெண்களின் பங்கு மிகவும் பெரியது. ராணுவத்தில் அவர்களுக்கு ஆபத்து அதிகமாகவே உள்ளது. கிராமப்புற பின்னணியில் இருந்தே பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் சேர்கிறார்கள்.

தற்போதைய சமூக நடைமுறைக்கு ஏற்றவாறு, பெண்களை தளபதிகளாக ஏற்றுக் கொள்ள மனதளவில் இன்னும் தயாராகவில்லை என்று கூறியது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை  விசாரித்த நீதிபதிகள், ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், 14 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பெண் அதிகாரிகளுக்கு உயர் பதவி வழங்கவேண்டும். ராணுவத்தில் பெண்களை நியமிப்பதற்கான உத்தரவை நிரந்தரமாக்க வேண்டும் என்று தெரிவித்தது. பெண்களுக்கு ராணுவத்தில்  சமத்துவம் வழங்க மறுக்கும் மத்திய அரசின் வாதத்துக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தது.  

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரன்ஜன் சவுத்ரி, கிராமங்களில் இன்றளவும் ஆண், பெண் என்ற பேதம் பார்க்கப்படுகிறது. காலங்காலமாக பின்பற்றப்படும் இந்த முறையை மாற்ற  மத்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆண்களை விட பெண்கள் முன்னேறி வருகின்றனர். அனைத்து துறையிலும் ஆண், பெண் என்ற பேதம் இல்லை என்பதை மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும். ராணுவத்திலும் இந்த பேதம்  பார்க்கக்கூடாது என்று தெரிவித்தார்.

Related Stories: