ஜோலார்பேட்டை அருகே பயங்கரம் வீட்டில் ஏசி வெடித்து தீப்பிடித்து போலீஸ்காரர் கருகி பலி: மனைவி படுகாயம்

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம்(45). செங்கல்பட்டில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வெற்றிச்செல்வி.  இவர்களது மகள் சவுமியா.

Advertising
Advertising

நேற்று முன்தினம் இரவு ஏசி பொருத்தப்பட்ட அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் சிறுமி சவுமியாவை கழிவறைக்கு  வெற்றிச்செல்வி அழைத்து சென்றுள்ளார். அப்போது, திடீரென படுக்கை அறையில் பயங்கர  வெடிசத்தம் கேட்டது. பதற்றமடைந்த வெற்றிச்செல்வி ஓடிவந்து பார்த்தபோது, சண்முகத்தின் உடல் முழுவதும் தீப்பிடித்து அலறித்துடிப்பதை கண்டு தீயை அணைக்க முயன்றார். அப்போது, அவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த தம்பதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  மாற்றப்பட்டனர். அங்கு நேற்று மதியம் போலீஸ்காரர் சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார். வெற்றிச்செல்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி சவுமியா கழிவறைக்கு சென்றதால் காயமின்றி தப்பினார்.  இது குறித்து ஜோலார்பேட்டை  போலீசார் விசாரணை நடத்தினர். அதில் படுக்கை அறையில் இருந்த ஏசி வெடித்து தீப்பிடித்தது தெரியவந்தது. ஏசி வெடித்ததில் போலீஸ்காரர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: