ஹைவேவிஸ் மலைச்சாலையில் உள்ள 18 கொண்டை ஊசி வளைவுக்கு பூக்கள் பெயர்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைச்சாலையில் உள்ள 18 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இங்கு மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, மேல்மணலாறு, இரவங்கலாறு உள்ளிட்ட 7 மலைக்கிராமங்கள் உள்ளன. ஏலம், காப்பி, மிளகு, தேயிலை உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுடி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் 5 அணைகளும், நீண்ட ஏரிகளும் உள்ளன. மலைப்பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசிக்க கீழிருந்து 18 கொண்டைஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். ஆரம்பத்தில் நெடுஞ்சாலை துறையினர் ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுக்கும் மலர்களின் பெயர்களை சூட்டியிருந்தனர்.

ஆனால் அது குறித்த பெரிதாக விளம்பரம் செய்யவில்லை. கடந்த 2015ம் ஆண்டு மலைச்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது. தற்போது பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 கொண்டை ஊசி வளைவுகளிலும் மலர்களின் பெயருடன் கூடிய போர்டுகளை நெடுஞ்சாலைத்துறையினர் வைத்துள்ளனர். தென்பழனி அடிவாரத்தில் துவங்கும் 1வது கொண்டை ஊசி வளைவுக்கு ‘குறிஞ்சி பூ’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்தடுத்து கொண்டை ஊசி வளைவுகளுக்கு மல்லிகை, முல்லை, மருதம், சூரியகாந்தி என மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலாப்பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: