தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட அனைத்து வழித்தடங்களும் 3 ஆண்டுகளுக்குள் மின்மயம்: ரயில்வே பொதுமேலாளர் தகவல்

மானாமதுரை: தெற்குரயில்வேக்கு உட்பட்ட அனைத்து வழித்தடங்களும் மூன்று ஆண்டுகளுக்குள் மின்மயமாக்கப்படும் என மத்திய ரயில்வே பொது மேலாளர் ஒய்.பி.சிங் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரயில்வே வழித்தடம் மின்மயமாக்கப்படும் பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மின்மயமாக்கல் ரயில்வே பொதுமேலாளர் ஒய்.பி.சிங் கூறியதாவது: தெற்கு ரயில்வே இருப்புப்பாதையில் தற்போது 1,137 கி.மீ. தூரத்தில் ரயில்கள், டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 6 ஆண்டுகளாக அனைத்து தடங்களும் மின்மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தெற்கு ரயில்வேயில் உள்ள 1,137 கி.மீ. தூரத்தை மின்மயமாக்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக மானாமதுரை - மதுரை இடையேயான ரயில்பாதை மின்மயமாக்குவதற்கான பூமி பூஜை தற்போது தொடங்கியுள்ளது.

இவை தவிர திருச்சி - விருதுநகர், மானாமதுரை - ராமேஸ்வரம், விருதுநகர் - தென்காசி, தென்காசி - திருச்செந்தூர், திருச்செந்தூர் - தூத்துக்குடி, தென்காசி - செங்கோட்டை, செங்கோட்டை - புனலூர், திண்டுக்கல் - பொள்ளாச்சி, திண்டுக்கல் - போத்தனூர், பொள்ளாச்சி - பாலக்காடு, கரூர் - சேலம், கடலூர் - துறைமுகம், கடலூர் - விழுப்புரம் உள்ளிட்ட 20 வழித்தடங்கள் மூன்று ஆண்டுகளுக்குள் மின்மயமாக்கப்படும். இதற்கான ஆய்வு பணிகள் துவங்கப்பட்டு சுமார் ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு படிப்படியாக பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் திட்ட மின்மயமாக்கல் அதிகாரிகள் மோகன் பிள்ளை, மகேந்திரபிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: