மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சேர்க்கை பட்டியல் எங்கே?: பல்கலை சமர்ப்பிக்க யுஜிசி உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் இடங்களுக்கு நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை, மாற்றுத்திறனாளிகள் நல விதிகள் பின்பற்றப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக யுஜிசி செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ரிட் மனு 292ன் மீது 2017 டிசம்பர் 12ம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதுதொடர்பாக   2019 ஜனவரி 11ம் தேதி, ஜூன் 11ம் தேதி, டிசம்பர் 4ம் தேதி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் நினைவூட்டல் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016ன் பிரிவு 32ன்படி ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கையை பாடப்பிரிவு வாரியாக யுஜிசிக்கு பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்காக மாநில மாற்றுத்திறனாளிகள் இயக்குனரகத்துக்கு மாணவர் சேர்க்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் சேர்ந்துள்ளார்கள் என்பதை கண்காணிக்க வேண்டியது மாநில மாற்றுத்திறனாளிகள் இயக்குனரகத்தின் பொறுப்பு. மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016ன்படி மாணவர் சேர்க்கை நடத்தாத கல்வி நிறுவனங்கள் மீது மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016ன் பிரிவு 89ன்கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார். சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறையால் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கான பொதுக்கட்டிட கட்டுமான விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள், அவற்றுடன் இணைவு பெற்ற கல்லூரிகள் குறிப்பிட்ட கட்டுமான விதிகளை காலக்கெடு நிர்ணயித்து, நிறைவேற்றுவது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் முறையாக நிறைவேற்றப்பட மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அடங்கிய குழுக்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பட வேண்டும். அவை முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை https://ugc.ac.in/uamp/ என்ற இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: