பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது: ஆவின் நிர்வாகம்

சென்னை: பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் பால் லாரிகளை இயக்குவதற்கான, ஒப்பந்தம், கடந்த 2018ம் ஆண்டுடன் முடிவடைந்ததை அடுத்து, ஒப்பந்தத்தை அரசு நீட்டிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அதிகாரிகளுடன் ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால், லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யும் 300 டேங்கர் லாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.இதனால் பொதுமக்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில் பால்வளத்துறை ஆணையர் வள்ளலார் தலைமையில் சென்னையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை பெருநகருக்கும் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் ஆவின் பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட துணை பதிவாளர்கள் மற்றும் ஆவின் பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி வழங்கப்படும் எனவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: