உமர் அப்துல்லாவை பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய கோரிய வழக்கு: ஜம்மு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் தடுப்பு காவல் நீட்டிப்பு குறித்து ஜம்மு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஒரு சிலர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

உமர் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரும் ஆட்கொணர்வு மனுவை அவர் தாக்கல் செய்தார். அந்த மனுவில், பாராளுமன்ற உறுப்பினராக நாட்டுக்காக பணியாற்றியவர், மாநில முதல்வராக இருந்தவர், மத்திய மந்திரியாக இருந்தவரால் மாநிலத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி இரவு முதல் உமர் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை காவலில் வைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும், என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, எம்.சந்தானகவுடர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை துவங்கியதும் இந்த அமர்வின் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி எம்.சந்தானகவுடர் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து தாம் விலகி கொள்வதாக தெரிவித்தார். ஆனால் விலகலுக்கான காரணம் எதையும் அவர் கூறவில்லை. இந்நிலையில், இந்த வழக்கானது இன்று அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உமர் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டது தொடர்பாக 15 நாட்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. முன்னதாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான கபில்சிபல், வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப கேட்டார். ஆனால், அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை.

Related Stories: