சிறுமுகையில் சிறுத்தை அட்டகாசம்

மேட்டுப்பாளையம்:  சிறுமுகை சிட்டேபாளையம் கிராமத்தில் உள்ள பெரிய தோட்டத்தில் கடந்த சில தினங்களாக சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இங்குள்ள விவசாயி முருகன் என்பவரின் இரவு நேரத்தில் புகுந்த சிறுத்தை வாழை தோட்டத்தினுள் கட்டப்பட்டிருந்த பசு மாட்டினை தாக்கி கடித்துக் குதறியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த பசுமாட்டின் உடல் மற்றும் சிறுத்தையின் கால் தடயங்களை ஆய்வு செய்தனர்.

சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இதே பகுதியில் சரவணன் என்பவருடைய தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த ஆட்டை கடித்து கொன்றுள்ளது. இதுகுறித்து சிறுமுகை வனத்துறையிடம் விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் விவசாயிகள் புகார் அளித்தனர்.

சிறுத்தையை பிடிக்க உடனடியாக கூண்டு வைக்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறினர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை ரேஞ்சர் மனோகரன் விவசாயிகளிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சிறுத்தையை பிடிக்க உடனடியாக கூண்டு வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.  உடனடியாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து கூண்டு கொண்டுவரப்பட்டு அது பெரிய தோட்டப் பகுதியில் உள்ள ஓதி மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ளது.  சிறுத்தை சிக்கும் என வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.

Related Stories: