திருச்சியில் அதிகாலையில் பரபரப்பு கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்தார் தாய்

திருச்சி: திருச்சி சுப்ரமணியபுரம் கோனார் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(35), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மைதிலி(30). இவர்களுக்கு 9 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதில் சந்தோஷ்குமார் வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்து வருவதால் வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து மனைவி மகளுடன் இருந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார் மனைவியிடம் போனில் பேசியுள்ளார். அப்போது கணவன், மனைவிக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை திட்டிவிட்டு போனை வைத்துவிட்டார்.

இதில் வெகுநேரமாக அழுது கொண்டே இருந்த மைதிலி, நேற்று அதிகாலை 2.45 மணியளவில் 9 மாத கைக்குழந்தையுடன் வீட்டின் பின்னால் இருந்த கிணற்றில் குதித்தார். அதிகாலை நேரம் திடீரென கிணற்றில் பெரும் சத்தம் கேட்பதும், பெண் மற்றும் குழந்தையின் அழுகுரல் கேட்பதை கேட்ட வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் டார்ச் லைட் அடித்து பார்த்தனர். அப்போது தாயும், குழந்தையும் கிணற்றில் தண்ணீரில் தத்தளிப்பது தெரிந்தது. இது குறித்து உடனடியாக இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் மில்கியூராஜா தலைமையில் 9 வீரர்கள் கொண்ட இஆர்டி எனப்படும் ஸ்பெஷல் டீம் கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவயிடம் சென்றனர். தீயணைப்பு வீரர் ஒருவர் கயிறு கட்டி 35 அடி கிணற்றில் இறங்கி 5 அடி ஆழமுள்ள நீரில் தத்தளித்து கொண்டிருந்த தாயையும், குழந்தையையும் கயிறு கட்டி மீட்டனர். மேலும் மேல் பகுதியில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ்சில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்து தாயையும் குழந்தையையும் மீட்ட தீயணைப்புத்துறையினரை அங்கு குழுமி இருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். எதற்காக குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து மைதிலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அதிகாலை நேரத்தில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: