பொருளாதாரம் மீளுமா? தொழில்துறை உற்பத்தி மீண்டும் சரிந்தது

சென்னை: தொழில்துறை உற்பத்தி கடந்த டிசம்பரில் மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.  நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவில் உள்ளது. இது மீள்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பொருளாதாரத்துக்கு முக்கிய பலமாக உள்ள தொழில்துறைகளில் உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்கு ஏற்றம் அடையவில்லை.  ஏறக்குறைய கடந்த ஆண்டு முழுக்க உற்பத்தி சரிவையே சந்தித்து வந்துள்ளது. தொடர்ந்து மூன்று மாத சரிவுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பரில் 1.8 சதவீதம் அதிகரித்தது சற்று ஆறுதலாக இருந்தது. இருப்பினும் டிசம்பரில் மீ்ண்டும் உற்பத்தி சரிந்து விட்டது.   இதுற்கு உற்பத்தி துறையில் 1.2 சதவீதம் சரிவு ஏற்பட்டதே காரணம். மூலதன பொருட்கள் உற்பத்தி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18.2 சதவீதம் குறைந்து விட்டது. மின்சார உற்பத்தி, சுரங்க துறைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

 இதுபோல், கடந்த ஜனவரி மாதத்துக்கான பண வீக்கம் 7.59 சதவீதமாக உள்ளது. இது டிசம்பரில் 7.35 சதவீதமாக இருந்தது. இதற்கு முன்பு 2014 மே மாதத்தில் சில்லரை விலை பண வீக்கம் 8.33 சதவீதமாக இருந்ததுதான் அதிகபட்ச உச்சமாக கருதப்பட்டது.

மீண்டும் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பண வீக்கம் அதிகரித்துள்ளது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை இருந்தாலும், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொழில் துறை உற்பத்தியை பெருக்க அரசு ஆவண செய்ய வேண்டும். அரசு தீவிர கவனம் செலுத்தாவிட்டால் பொருளாதாரம் மீள்வதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைந்து விடும் ஆபத்து உள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: