புதுச்சேரி சிறப்பு சட்டசபை கூட்டத்தில் நிறைவேறியது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம்: என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக புறக்கணிப்பு-பாஜ வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சிறப்பு சட்டசபை கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது. கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக புறக்கணித்தது. பாஜக வெளிநடப்பு செய்தது. புதுச்சேரி சிறப்பு சட்டசபை கூட்டம் நேற்று காலை 9.40 மணிக்கு துவங்கியது. சபாநாயகர் சிவக்கொழுந்து திருக்குறள் வாசித்து துவக்கி வைத்தார். பின்னர் முன்னாள் எம்எல்ஏக்கள் புருஷோத்தமன், ராமநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பினை சபாநாயகர் வாசித்தார். தொடர்ந்து எம்எல்ஏக்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து 2020ம் ஆண்டு புதுவை சரக்கு சேவை வரி திருத்த சட்ட முன் வரைவு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடுகளை  திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

குடியுரிமை திருத்த சட்டம், இந்திய மக்கள் அனைவரிடம் வேதனையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து பகுதி மக்களும் அமைதியான வழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர், பவுத்தர், சமணர், பார்சி, கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும்போது முஸ்லிம்களை புறக்கணித்ததன் மூலமாக இந்த சட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாக பொதுமக்களுக்கு ஐயம் ஏற்பட்டுள்ளது. எனவே மதசார்பின்மைக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

இந்த தீர்மானத்தின் மீது அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், சிவா, வெங்கடேசன், அமைச்சர்கள் ஷாஜகான், துணை சபாநாயகர் பாலன் ஆகியோர் பேசினர். இதனைதொடர்ந்து தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையை புறக்கணித்தனர். பாஜக நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். தனிமைப்படுத்தப்பட்ட தனவேலு: புதுவையில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாகூர் தொகுதி ஆளுங்கட்சி எம்எல்ஏவான தனவேலு போர்க்கொடி உயர்த்தினார். மேலும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான புகாரை கவர்னரிடம் அளித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கட்சி எம்எல்ஏக்கள் அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் சபாநாயகர் சிவக்கொழுந்திடம் மனு கொடுத்தனர். இந்த புகாரின் மீது 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தனவேலுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் அவர் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. நேற்று நடந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தனவேலு எம்எல்ஏ கலந்து கொண்டார். ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. வேறு வழியின்றி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மிகவும் அமைதியாக தனவேலு அமர்ந்திருந்தார்.

* வேளாண் மண்டலமாக காரைக்கால் அறிவிப்பு

சட்டசபையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கமலக்கண்ணன் பேசுகையில், ‘காரைக்கால் மாவட்டம், பாகூர் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது’ என முன்மொழிந்தார். பின்னர் இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: