தேசிய மக்கள்தொகை பதிவேட்டை ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி வைக்கிறார் குடியரசுத் தலைவர்!!

புதுடெல்லி: தேசிய மக்கள் தொகை (என்பிஆர்) பதிவேட்டை தயாரிக்கும் பணி வரும் ஏப்ரல் 1ம் தேதி மாதம் முதல் தொடங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தயாரிப்பு பணியை தொடக்கி வைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் நபராக தன்னை பற்றிய விவரங்களை அளிக்க உள்ளதாக குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் மக்கள் தங்களின் பெயரை சேர்க்க ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு எண் (பான்) உள்ளிட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட 21 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை குடும்ப தலைவர் காட்ட வேண்டியதிருக்கும். இது தொடர்பாக மத்திய அரசு உரிய அறிவுறுத்தலை வழங்கும் என கூறப்படுகிறது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் முக்கிய விவரங்கள்:

*பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வரும் 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.8,754 கோடியும், தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிப்புக்கு ரூ.3,941 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

*என்பிஆர் புதுப்பிப்பு பணிகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்க உள்ளது. அசாம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இதற்கான தகவல்கள் வீடு வீடாக சென்று திரட்டப்படும். இதில், நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் வீடு அமைந்துள்ள பகுதி, ஆதார்,  மொபைல் எண், டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட  தகவல்களும், தந்தை, தாய், கணவன்,  மனைவி பெயர், பிறந்த இடம், குடியுரிமை உள்ளிட்ட அடிப்படை தகவல்களும்  சேகரிக்கப்படும்.

 *1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் 2003 குடியுரிமை விதிகள்  அடிப்படையில் என்பிஆரில் ஒவ்வொரு குடிமகனும் பதிவு செய்வது கட்டாயமாகும்.  

*குடியுரிமை திருத்த சட்டத்தினால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அடுத்ததாக, குடியுரிமையில் கைவைக்கக் கூடிய தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

*இதற்கு இப்போதே எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், என்ஆர்சிக்கான முதல் படிதான் தேசிய மக்கள் தொகை பதிவோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. என்பிஆர் மற்றும் சென்சஸ் தகவல்களிலேயே என்ஆர்சிக்கு தேவையான அனைத்து தகவலும் பெறப்பட்டு விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: