சேலம் ஓமலூர் கோயில் திருவிழாவில் இருதரப்பினருக்குமிடையே மோதல்: கல்வீச்சில் ஈடுபட்டதால் போலீஸ் தடியடி

சேலம்:  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோவிலின் தேர் திருவிழாவின் போது இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. கடைகள் மற்றும் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டதால், காவலர்கள் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலில் தைப்பூச திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தேரோட்டத்தில் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தன. அப்போது இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி மோதலாக வெடித்தது. ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த இருத்தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.

மேலும், அத்தெருவில் இருந்த கடைகள், வாகனங்கள் மற்றும் வீடுகள் மீதும் கல்வீசி தாக்கப்பட்டது. இதனால், பதட்டமான சூழல் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த காவலர்கள் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். மேலும், கல்வீச்சில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். தேரிலிருந்து உற்சவர் சிலையை கோவிலுக்குள் எடுத்து செல்லவிடாமல் ஒரு தரப்பினர் தடுக்க முயற்சி செய்ததால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோதலில் ஈடுபட்டவர்கள் களைந்து சென்றதையடுத்து தேரிலிருந்த உற்சவர் சிலை காவலர்களின் பாதுகாப்புடன் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது.

Related Stories: