பொருளாதாரத்தை மீட்க எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொல்கத்தா: ‘‘நாட்டின் பொருளாதாரத்தை மீட்க பழிவாங்கும் அரசியலை கைவிட்டு எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்ற வேண்டும்’’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மம்தா அரசு தாக்கல் செய்த முழு பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பேட்டியளித்த முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: நாட்டின் பொருளாதார நிலை குறித்து ரிசர்வ் வங்கி கூறியவை எல்லாம் உணர்வுப்பூர்வமான விஷயங்கள்.

அதனால் வெறுப்பு மற்றும் பழிவாங்கும் அரசியலை கைவிட்டு, பொருளாதாரத்தின் மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால், எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். இப்போதெல்லாம் முடிவுகள் எடுப்பதற்கு முன்பு, மாநிலங்களுடன், மத்திய அரசு ஆலோசிப்பதில்லை. மேற்கு வங்கத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட், மக்களின் தேவைகளை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மக்களுக்கு ஆதரவான பட்ஜெட். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* 75 யூனிட் இலவச மின்சாரம்

மேற்குவங்க சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 75 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ‘சாய் சந்தரி’ என்ற பெயரில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.500 கோடி மதிப்பில் வீடு கட்டும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 370 தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் 3 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைவர். மிகச்சிறிய, மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்க மாநிலம் முழுவதும் 100 சிறுதொழில் மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: