பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் பம்ப் செட் உற்பத்தி கடும் வீழ்ச்சி: சந்தை வாய்ப்பு ஏற்படுத்தி தர கோரிக்கை

கோவை: தொழில்நகரமான கோவையில் பம்ப் செட் மற்றும் அதுசார்ந்த இஞ்சினியரிங், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் அதிகளவில் இயங்கிவருகின்றன. இந்திய அளவில் ஒட்டுமொத்த பம்ப் செட் உற்பத்தியில் சுமார் 70 சதவீத அளவிற்கான பங்களிப்பை கடந்த காலங்களில் கோவையை சேர்ந்த நிறுவனங்கள் வழங்கி வந்தன. கோவையை பொறுத்தவரை 50க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் பம்ப் செட் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் உற்பத்தி செய்யப்படும் பம்ப் செட்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல பம்ப் செட் உற்பத்தியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட சார்பு மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

சிறு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பம்ப் செட்கள் தமிழகத்திலும், குறு நிறுவன பம்ப் செட்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களிலும், நடுத்தர நிறுவன பம்ப் செட்கள் வடமாநிலங்களிலும் பெருமளவு சந்தைப்படுத்தப்படுகின்றன. கடந்த காலங்களில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் அக்டோபர் வரை பம்ப் செட்டிற்கான தேவை அதிகமாக இருந்ததால் இந்த காலங்களில் உற்பத்தி அதிகளவில் நடந்து வந்தது. இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நவம்பர் முதல் ஜூலை வரையாக சுருங்கியது.  நடப்பாண்டில் இந்த காலகட்டமும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏமாற்றமளிக்கும் காலமாக மாறியுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு போன்ற பொருளாதார நடவடிக்கைகளின் தாக்கத்தால் சுணக்கத்தில் பம்ப் செட் உற்பத்தி, ஜனவரி மாதத்திற்கு பின் மறுமலர்ச்சி பெறும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஆனால் நடப்பாண்டு எதிர்பார்த்த அளவு போதிய ஆர்டர்கள் கிடைக்கவில்லை. மேலும் உதிரிபாக உற்பத்தியில் மட்டும் ஈடுபட்ட வந்த குஜராத் நிறுவனங்கள் தற்போது பம்ப் செட் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கோவை பம்ப் செட் நிறுவனங்களின் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்நிறுவனங்களின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் சிறு,குறு,நடுத்தர தொழில்நிறுவனங்களை மூடும் நிலை ஏற்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தொழில்முனைவோர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறுகையில், ‘‘இந்த காலகட்டத்தில் சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பம்ப் செட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகும். ஆனால் தற்போது 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனையாவதே கேள்விக்குறியாக உள்ளது.

இதனால் உற்பத்தி குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சியால் தொழிலாளர்கள் மட்டுமின்றி தொழில்முனைவோரும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். உற்பத்தியை அதிகளவில் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான தொழில் மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்,’’ என்றனர்.

Related Stories: