கரூர் கொளந்தானூர் அருகே மூடியே கிடக்கும் நாய்கள் அறுவை சிகிச்சை மையம்: பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

கரூர்: கரூர் கொளந்தானூர் அருகே பயன்பாடற்ற நிலையில் உள்ள நாய்கள் அறுவை சிகிச்சை மைய வளாகத்தை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் செல்லும் சாலையோரம் கொளந்தானூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாய்கள் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கொண்டு வரப்பட்டு கு.க செய்து திருப்பி அனுப்பும் வகையில் இந்த அறுவை சிகிச்சை மையம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சில மாதங்கள் மட்டுமே இவை பயன்பாட்டில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, புதிதாக தெரசா கார்னர் பகுதியில் கால்நடை பராமரிப்பு அலுவலக வளாகம் கொண்டு வரப்பட்டதால் இவை செயல்படாமல் நிறுத்தப்பட்டன.

அந்த நாளில் இருந்து இதுநாள் வரை இந்த மைய வளாகம் பூட்டப்பட்ட நிலையில், உட்புறம் அதிகளவு முட்புதர்கள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மேலும், இந்த மைய வளாகத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. மிக முக்கியமாக, செயல்படாமல் உள்ள இந்த மைய வளாகத்தின் அருகிலேயே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் உள்ளன. இதனால், தினமும் அறுவை சிகிச்சை மைய வளாகம் வழியாக ஏராளமான வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால், சுகாதாரமற்ற நிலையிலும், பாதுகாப்பற்ற நிலையிலும், இந்த அறுவை சிகிச்சை மையம் உள்ளதால், பொதுமக்கள் பீதியுடன் உள்ளனர்.

எனவே, இதனை திரும்பவும் சீரமைத்து வேறு அலுவலக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் அல்லது இந்த இடத்தில் இருந்து பாழடைந்த இந்த மைய வளாகம் அகற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான மாற்று ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: