காரியாபட்டியில் ‘சும்மா’ கிடக்கும் அம்மா குடிநீர் நிலையம்: ஓராண்டுக்கு மேலாக விற்பனை இல்லை

காரியாபட்டி: காரியாபட்டி பஸ்நிலையத்தில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அம்மா குடிநீர் விற்பனை நிலையம் செயல்படாமல் உள்ளது. இதனால், பஸ்நிலையத்தில் குறைந்த விலையில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குறைந்த விலையில் பாட்டில் குடிநீர் கொடுப்பதற்காக, போக்குவரத்து துறை சார்பில், அனைத்து பஸ் நிலையங்களில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது. ஒரு லிட்டர் பாட்டில் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனடிப்படையில், காரியாபட்டியில் தொடங்கப்பட்ட அம்மா குடிநீர் விற்பனை நிலையம், கடந்த ஓராண்டுக்கு மேலாக செயல்படாமல் உள்ளது.

குடிநீர் விற்பனை நிலையத்தை தினசரி திறந்து வைக்கின்றனர். ஆனால், பதில் சொல்வதற்கு ஆள் இருப்பதில்லை. இதனால், பஸ்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் குறைந்த விலையில் தண்ணீர் பாட்டில் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, போக்குவரத்து துறை நிர்வாகம், காரியாபட்டி பஸ்நிலையத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்திற்கு ஊழியரை நியமித்து, குறைந்த விலையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘காரியாபட்டி பஸ்நிலையத்தில் செயல்பட்டு வந்த அம்மா குடிநீர் விற்பனை நிலையம் மூடிக் கிடக்கிறது. இது குறித்து அதிகாரிகளைக் கேட்டால், அவர்கள் பணியாளர் பற்றாக்குறை என்கின்றனர். திருச்சுழி தொகுதியை அரசு அதிகாரிகள் வேண்டும் என்றே புறக்கணிக்கின்றனர். மக்கள் நலத் திட்டங்களையும் முடக்கி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: