திருவிக நகர் அகரம் பகுதியில் குடிமகன்களின் புகலிடமாக மாறிய விளையாட்டுத்திடல்: சிறுவர்கள் கடும் அவதி

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி திருவிக  நகர் 6வது மண்டலத்திற்கு உட்பட்ட 67வது வார்டு பெரம்பூர், அகரம் பகுதியில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலை மது அருந்தும் இடமாக குடிமகன்கள் மாற்றியுள்ளனர். இதனால் சிறுவர்கள் விளையாட முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி திருவிக  நகர் 6வது மண்டலத்திற்கு உட்பட்ட 67வது வார்டு பெரம்பூர், அகரம் பகுதியில் தான்தோன்றி அம்மன் கோயில் தெரு உள்ளது. இங்குள்ள ஆனந்தன் விளையாட்டு திடலில் தினமும் குடிமகன்கள் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு  செல்கின்றனர். மேலும் இந்த பூங்காவை   சிறுவர்கள் மலம் கழிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். செடி, கொடிகள் ஆங்காங்கே முளைத்து நடைபாதையில் உள்ளதால் மக்கள்  நடைப்பயிற்சி செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த பூங்காவை சீரமைக்க வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இப்பகுதி ஆனந்தன் விளையாட்டு திடலில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் மூலம் சிறுவர்கள் தினமும் விளையாடி வந்தனர். ஆனால் கடந்த ஓராண்டாகவே  விளையாட்டு திடலை சரியாக மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்கவில்லை.  மேலும் ஆண்டுதோறும் மாநகராட்சி விளையாட்டு திடல் அருகே உள்ள கோயிலில் தீமிதி திருவிழா நடைபெறும். இந்த தீமிதி திருவிழா விளையாட்டு திடலில் நடைபெறுவதால் இந்த விளையாட்டு திடல்  முற்றிலுமாக சிதிலமடைந்துள்ளது. எனவே இங்கே நடைபெறும் தீமிதி திருவிழாவை  வேறு இடத்திற்கு மாற்றி இந்த விளையாட்டு திடலை சரி செய்து தர வேண்டும். மேலும் விளையாட்டு திடலை மக்கள் பயன்படுத்தாததால்  குடிமக்கள் இங்கு வந்து குடித்துவிட்டு பாட்டில்களை ஆங்காங்கே போட்டுவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே விளையாட்டு திடல் எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ, அதை மனதில் வைத்து உயர் அதிகாரிகள் செயல்பட்டு விளையாட்டு திடலை மீட்டுத்தர வேண்டும்’’ என்றனர்.

Related Stories: