வாகன ஓட்டுனர்கள் அவதி: ஆசனூர் மேம்பால பணிகளை விரைந்து துவங்க கோரிக்கை

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்பட்டு வரும் வாகன விபத்துகளால் ஏராளமானவர்கள் உயிரிழந்தும், படுகாயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக உளுந்தூர்பேட்டையில் இருந்து அஜீஸ்நகர், பாலி, ஷேக்உசேன் பேட்டை, ஆசனூர், எறஞ்சி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரத்தில் அடிக்கடி ஏற்பட்டு வரும் விபத்துகளினால் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தொடர் விபத்துகளை தடுக்க அதிக விபத்துகள் நடைபெற்று வரும் இடங்களில் சிறு மேம்பாலங்கள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அஜீஸ்நகர், பாலி பகுதியில் சிறு மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு பக்கவாட்டு சுவர்கள் அமைக்கப்பட்டது. ஆசனூர் கிராமத்தில் இதே போல் மேம்பாலம் அமைப்பதற்கான அடிப்படை பணிகள் துவங்கப்பட்டது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரையில் மண் தோண்டிய இடத்தில் ஜல்லிகள் மட்டுமே கொட்டப்பட்டு உள்ளது. வேறு எந்தவித பணிகளும் நடைபெறாமல் உள்ளதால் இந்த பகுதி தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வரும் இடமாகவே உள்ளது. மேலும் சாலை பணிகள் நடைபெறமால் ஜல்லி கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும், ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆசனூர் கிராமத்தில் மேம்பாலம் அமைக்கும் பணியினை விரைந்து துவங்க வேண்டும் என இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படும் முன்னர் ஆசனூர் கிராமத்தில் மேம்பாலம் அமைக்கும் பணியினை விரைந்து துவங்கிட வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: