காவிரி பாசன பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி முடிவிற்கு பல்வேறு கட்சித்தலைவர், விவசாய பிரதிநிதிகள் வரவேற்பு

சேலம்: சேலம் தலைவாசலில் ரூ.396 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் நவீன கால்நடை பூங்காவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய முதல்வர் பழனிசாமி, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொண்டு இதை அறிவிக்கிறேன். டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அதிமுக அரசு அனுமதி தராது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி கிடையாது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்கும் நடவடிக்கைக்கு சிறப்பு சட்டம் இயற்றப்படும். சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசித்து காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப்படும் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்ததற்கு பல்வேறு கட்சி தலைவர்கள், விவசாயி பிரிதிநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளது.

முதல்வர் பழனிசாமி டுவிட்:

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்:

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பா.ம.க.வின் 10 அம்சக்  கோரிக்கைகளில் முதன்மையானதை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றியும், பாராட்டுகளும்! என்று பதிவிட்டுள்ளார்.

டாக்டர் அன்புமணி டுவிட்:

பாமகவின் மிக முக்கிய கோரிக்கையான காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்று அறிவித்த தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு விவசாயிகளின் சார்பில் எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் டுவிட்:

மீத்தேன்,ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிராக போராடியவர்களையும் விவசாயிகளையும் முந்தாநாள்வரை விரட்டி, விரட்டி வழக்குகள் பதிந்து கைது செய்து வந்த பழனிசாமி அரசு.....இப்போதாவது மக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்து காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆக்குவோம் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் வழக்கம் போல இதுவெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல் முறையான சட்டமாக கொண்டுவரப்படவேண்டும்.மேலும் விவசாயிகளையும் பொதுமக்களையும் பாதிக்கிற எட்டுவழிச்சாலை திட்டம் நியூட்ரினோ ஆய்வகம் போன்றவற்றையும்  தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று தனடு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வரின் அறிவிப்பால் விவசாயிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்; டெல்டா விவசாயிகளை முதல்வர் பழனிசாமி காப்பாற்றியுள்ளார் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பு ஆறுதலை தருகிறது என விவசாய சங்க பிரதிநிதி பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பை வரவேற்கிறேன்; அறிவிப்போடு இல்லாமல் உரிய சட்ட நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்று சி.பி.எம் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

வேளாண் மண்டலம் என்பதை தமிழ் மக்கள் கொண்டாடும் செய்தியாக பார்க்கிறேன். போராடிய கதிராமங்கலம் மக்களுக்கு கிடைத்த வெற்றி இது என்று தமிழ்ப் பேரரசு கட்சித் தலைவரும் இயக்குநருமான கவுதமன் தெரிவித்துள்ளார்.

Related Stories: