வாக்கி டாக்கி முறைகேடு எதிரொலி: 14 காவல்துறை அதிகாரிகள், 2 தனியார் நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: தமிழக காவல் துறையை நவீனமாக்கும் திட்டத்தின் படி 2017-18-ம் ஆண்டில் தமிழக காவல்துறைக்கு ரூ.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியின் கீழ் 2017ம் ஆண்டு காவல் துறைக்கு நவீன வாக்கி டாக்கி வாங்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நவீன கருவிகள் வாங்குவதற்கான பணிகளை தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவு மேற்கொண்டுவந்தது. புதிய கருவிகளை வாங்க பல்வேறு நிறுவனங்களுக்கு டெண்டர் கோரிய நிலையில், டெண்டர் நடைமுறையில் ஊழல் நடந்திருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய அப்போதைய உள்துறைச்செயலாளர் நிரஞ்சன் மார்டி, அப்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதினார். அதில் “தமிழகக் காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்க விடப்பட்ட டெண்டரில் பல்வேறு விதிமீறல்கள் இருக்கின்றன. வாக்கி - டாக்கிக்கு 28 சதவிகிதமாக இருந்த வரி, ஜிஎஸ்டி சட்டம் அமலான பிறகு 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட ஒரு கம்பெனிக்கு 28 சதவிகிதமாகக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் காவல் துறையை நவீனமயமாக்க ரூ. 47 கோடி நிதிதான் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளபோது, 88 கோடிக்கு எப்படி டெண்டர் விடப்பட்டது. ரூ. 88 கோடி டெண்டரில் ஒரேயொரு நிறுவனம் மட்டும் கலந்துகொண்ட நிலையில் மறு டெண்டர் விடாமல் அந்த ஒரே நிறுவனத்துகு எப்படி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்த முறைகேட்டில் தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய முக்கிய அதிகாரி உள்பட ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கும், தற்போது பதவியில் இருக்கும் உயர் காவல் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘வாக்கி டாக்கி முறைகேடு தொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில், தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய உயர் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தியது. குறிப்பாக இந்த முறைகேடு நடந்த நேரத்தில் தொழில்நுட்பபிரிவு எஸ்பியாக இருந்த அன்புச் செழியன் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைப் போன்று காவல்துறையில் தொழில்நுட்ப துறையின் ஒப்பந்ததாரர்கள் சிலரிடமும் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் விசாரணை இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக தொழில்நுட்ப பிரிவு உயர் அதிகாரிகளின் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையே, வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் 14 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 காவல்துறை அதிகாரிகள், 2 தனியார் நிறுவனங்கள் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறை எஸ்.பி. வீடுகள் உள்ளிட்ட 18 இடங்களில் நடந்த சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: