கந்தனுக்கு அரோகரா கோஷத்துடன் திருத்தணியில் தைப்பூச திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டனர். திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு மூலவர் முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள்  அணிவித்து சிறப்பு தீபாராதனை காண்பித்தனர்.  காலை 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் மூலம் சிறப்புஅபிஷேகம்,  அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இன்று இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்திலும் 7.30 மணிக்கு தங்கத்தேரிலும் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தைப்பூச  விழாவை காண பல பகுதியில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். இதன்காரணமாக பொது வழியில் சுமார் 5 மணி நேரமும், 25, 50 மற்றும் 100 ரூபாய் சிறப்பு கட்டணத்தில் சுமார் ஒன்றரை மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்து  தரிசனம் செய்தனர்.

திருத்தணி  பெரியார் நகரில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் கோவிலில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 7. 30 மணிக்கு சன்மார்க்க  கொடிஉயர்த்தப்பட்டு, 8 மணிக்கு தீபாராதனை நடத்தப்பட்டது. அகவல் பாராயணம்   நடந்தது. மதியம் 12 மணிக்கு ஏழுதிரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மதியம் 2 மணி  முதல் மாலை 6 மணி வரை பஜனை மற்றும் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. மாலை 7 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.

Related Stories: