நடிகை பலாத்கார வழக்கு நடிகை ரம்யா நம்பீசன் வாக்குமூலம்

திருவனந்தபுரம்:  கொச்சியில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று நடிகை ரம்யா நம்பீசன்  நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.  பிரபல மலையாள நடிகை கொச்சியில் காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை கொச்சியிலுள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப் உட்பட 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.  மேலும் பாதிக்கப்பட்ட நடிகையும் கடந்த சில தினங்களுக்கு முன் ஆஜராகி நடந்த சம்பவங்கள் குறித்து நீதிபதியிடம் விவரித்தார். தன்னை பலாத்காரம் செய்தவர்களையும், அவர்களுடன் இருந்தவர்களையும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் அவர் அடையாளம் காண்பித்தார்.

விசாரணை முழுவதும் மூடப்பட்ட நீதிமன்ற அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மலையாள சினிமா நடிகர், நடிகைகள், கலைஞர்கள் உட்பட 136 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகையின் நெருங்கிய தோழியான நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து தன்னிடம் பாதிக்கப்பட்ட நடிகை கூறிய தகவல்களை ரம்யா நம்பீசன் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: