விவிஐபிகளை ஏற்றிச்சென்ற வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 822 கோடி நிலுவை: தகவல் அறியும் உரிமை மனுவில் பதில்

புதுடெல்லி: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை ஏற்றி சென்ற வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து ரூ.822 கோடி வர வேண்டியுள்ளது என ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.  விவிஐபி சிறப்பு விமானங்கள் மூலம் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்கிறார்கள். இவர்களுக்கான பயணக் கட்டணத்தை சம்மந்தப்பட்ட அமைச்சகங்கள் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு விவிஐபி சிறப்பு விமானத்தால் எவ்வளவு தொகை சம்மந்தப்பட்ட அமைச்சகங்களில் இருந்து வரவேண்டியுள்ளது என்பதை தேதி வாரியான விலைப்பட்டியலை வழங்கும்படி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:   கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிப்படி விவிஐபிக்கள்  விமான பயணம் மேற்கொண்ட வகையில் விமான நிறுவனத்துக்கு ரூ.822 கோடி பாக்கி தொகை வரவேண்டியுள்ளது. இது தவிர வெளிநாட்டு பிரமுகர்களை ஏற்றிவந்த வகையில் ரூ.12.65 கோடியும், ஆட்களை வேறுஇடத்திற்கு வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட வகையில் 9.67 கோடியும் நிலுவையில் உள்ளது. மேலும் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, போதுமான அளவு விவிஐபி விமானங்கள் இல்லாததால் அரசு அதிகாரிகள் பயணம் செய்ய விமான டிக்கெட் எடுத்து தந்த வகையில் ரூ.526.14 கோடி செலவாகியுள்ளது.  இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.236.16 கோடி நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள மொத்த நஷ்டம் தொடர்பாக கடந்த டிசம்பர் 5ம் தேதி விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.8556.35 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிகளவிலான வட்டி சுமை,  குறைந்த விலையில் டிக்கெட் தரும் பிற நிறுவனங்கள், அடிக்கடி மாறும் இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் அதிகளவிலான செயல்பாட்டு கட்டணம் ஆகியவையே இந்த நஷ்டத்துக்கு காரணம்’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: