ஒருவருக்கு சான்றிதழ் வழங்கிய பிறகு இரண்டாவதாக வேறொருவருக்கு வெற்றிச்சான்று வழங்க முடியாது : தேர்தல் சர்ச்சையில் ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டையைச் சேர்ந்த தேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். என்னை எதிர்த்து பிரியதர்ஷினி என்பவர் போட்டியிட்டார். ஜன. 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு இரவு 8 மணியளவில் நான் வெற்றி பெற்றதாக கூற, வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், 3ம் தேதி பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக இரண்டாவதாக ஒரு சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே இரண்டாவது முறையாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதை செல்லாது என்றும், அவர் பதவி ஏற்க தடையும் விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், பிரியதர்ஷினி பதவி ஏற்க தடை விதித்திருந்தனர். இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு: ஜனநாயக நாட்டில் அதிகாரிகள் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பது தான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு. தேர்தல் அலுவலரால் எப்போது ஒருவர் வெற்றி பெற்றதாக சான்று (படிவம் 25) வழங்கப்பட்டதோ, அப்போது முதல் தேர்தல் அதிகாரியாக அவரது அதிகாரம் ரத்தாகி விடுகிறது. அதன்பிறகு அவருக்கு தேர்தல் தொடர்பான எந்த அதிகாரமும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் எப்படி மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது? தேர்தல் அலுவலரால் ஒருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கியது தவறு என்ற நிலை வந்தால், பஞ்சாயத்து சட்டப்படி தேர்தல் வழக்குகளுக்கான மாவட்ட நீதிமன்றத்தில் தான் முறையிட முடியும். ஏற்கனவே வழங்கப்பட்ட சான்றிதழை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஒருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய பிறகு, மறுவாக்கு எண்ணிக்கைக்கான விண்ணப்பத்தை பெற்றது அப்பட்டமான விதிமீறல். இதை அனுமதிக்க முடியாது.

தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டவர், மாவட்ட நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, மனுதாரர் கோரிக்கை ஏற்கப்படுகிறது. தேர்தல் அலுவலரால் இரண்டாவதாக வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழும், மனுதாரரின் வெற்றி செல்லாது என அறிவித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. இதில், ஆட்சேபனை இருந்தால் பிரியதர்ஷினி தரப்பில் தேர்தல் வழக்கு தொடர்ந்து பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: