போலீஸ் பாதுகாப்பு கோரி இயக்குனர் முருகதாஸ் மனு

சென்னை: போலீஸ் பாதுகாப்பு  அளிக்க கோரி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பட வினியோகஸ்தர்கள் தன்னை தொடர்ந்து மிரட்டுவதாகவும், அதனால் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும்  போலீசுக்கு உத்தரவிடக்கோரி திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்  கூறியிருப்பதாவது: தர்பார் திரைப்பட வினியோகம் தொடர்பாக, அந்த படத்தின் வினியோகஸ்தர்கள் என்னை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்கள். வினியோகஸ்தர்களின் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலால் என்னுடைய அன்றாட பணிகளை கூட செய்ய முடியவில்லை. தொடர்ந்து இதுபோன்ற மிரட்டல்கள் வந்ததால் எனக்கு  பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீசிடம் மனு கொடுத்தேன்.

ஆனால், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. எனக்கு  பாதுகாப்பு வழங்கவில்லை. எனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லை. எனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு சென்னை போலீசாருக்கு  உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி  ராஜமாணிக்கம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது  முருகதாஸ் சார்பில் வக்கீல் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, ‘தேனாம்பேட்டையில்  உள்ள மனுதாரரின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத 15 பேர் வந்து மிரட்டல் விடுத்துள்ளனர். மனுதாரர் தர்பார் படத்தின் இயக்குனர் மட்டுமே. அவருக்கும்  திரைப்பட வினியோகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவையில்லாமல் அவரை  மிரட்டுகிறார்கள்’ என்று வாதிட்டார். இதை கேட்ட நீதிபதி, அரசு  வக்கீலிடம், மனுதாரர் முருகதாசுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து  திங்கட்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.

Related Stories: