இந்தியாவில் அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் தனியார் நிறுவனம் க்யெஸ் கார்ப்

பெங்களூரு: இந்தியாவில் அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் தனியார் நிறுவனங்களில் பெங்களூருவைச் சேர்ந்தக்யெஸ் கார்ப் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தில் தற்போது 3.85 லட்சம் பணியாளர்கள் உள்ளதாக பங்குச்சந்தைக்கு அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ராணுவத்தில்தான் அதிக எண்ணிக்கையில் அதாவது 13 லட்சம் முதல் 14 லட்சம் பேர் வரை பணிபுரிகின்றனர். இதற்கு அடுத்தபடியாக ரயில்வேத்துறையில் 13 லட்சம் பேரும், தபால் துறையில் 4.2 லட்சம் பேரும் பணி புரிகின்றனர். இவை அனைத்துமே மத்திய அரசு பணியாகும். தனியார் துறையைப் பொருத்தமட்டில் க்யெஸ் கார்ப் நிறுவனத்தில்தான் 3.85 லட்சம் பணியாளர்கள் உள்ளனர்.

டிசிஎஸ் நிறுவனத்தில் இந்தியாவில் 3.56 லட்சம் பணியாளர்களும், வெளிநாடுகளில் 90 ஆயிரம் பணியாளர்களும் உள்ளனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 2.43 லட்சம் பணியாளர்களும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 1.94 லட்சம் பணியாளர்களும் உள்ளனர். 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் க்யெஸ் கார்ப் நிறுவன வளர்ச்சி 38 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் க்யெஸ் கார்ப் நிறுவனம் 2,000 நிறுவனங்களுக்கு பணியாளர் சேவையை செய்து வருகிறது . சாம்சங், அமேசான், ரிலையன்ஸ், வோடபோன், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்நிறுவனம் பணியாளர் சேவையை அளிக்கிறது.

இந்நிறுவன பணியாளர்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் 5 ஆயிரம் பேர் வரை பணிபுரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிறுவன பணியாளர்களின் மாதாந்திர சம்பள விகிதம் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை உள்ளது. ஊழியர்கள் 21 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். இந்நிறுவனம் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கும் அதிகமாக நேர்காணல் நடத்துகிறது. அனைத்து பணியாளர்களுக்கும் பிஎஃப் மற்றும் காப்பீடு வசதிகளையும் இந்நிறுவனம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: