ஆரணி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்

ஆரணி: ஆரணி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் ஆதனூர் கூட்ரோடு, ஏரி பகுதியில் 4க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து, டேங்குகளில் ஏற்றி, அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆதனூர் படவேட்டம்மன் கோயில் பின்புறம் உள்ள பைப்லைன் உடைந்து கடந்த ஒருமாதமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் சாமிக்கண்ணு தெரு, பிள்ளையார் கோயில் தெரு, படவேட்டு அம்மன் கோயில் தெரு, தச்சர் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, பள்ளத்தெரு உள்ளிட்ட தெருக்களுக்கு குடிநீர் வராமல் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி செயலாளர், ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பைப்லைன் உடைந்து கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. மேலும், உடைந்துள்ள பைப்லைனில் கழிவுநீர் கலக்கிறது. இந்த கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்வதால் சிரமம் ஏற்படுகிறது. அதேபோல், பைப்லைன் உடைந்து வெளியேறும் குடிநீர் சாலை ஓரங்களிலும், தெருக்களிலும் தேங்கி நிற்கிறது. இதனால் சாலைகள் சேறும், சகதியுமாய் மாறி தூர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள், புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளப்படவில்லை என தெரிவித்தனர்.

Related Stories: