குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வணிகர்கள், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வணிகர்கள், ஆட்டோ ஓட்டுனர், பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் கையெழுத்து வாங்கினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 24ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்- சிஏஏவை திரும்பப் பெறவேண்டும், தேசியக் குடிமக்கள் பதிவேடு- என்ஆர்சி தயாரிக்கும் எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது; தேசிய மக்கள் தொகைப்பதிவேடு- என்பிஆர் தயாரிக்கும் பணியைத் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்பவற்றை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக, தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தை பிப்ரவரி 2ம் தேதி முதல், 8ம்தேதி வரை நடத்தி பொதுமக்களின் கையெழுத்துக்களைப் பெற்று குடியரசு தலைவரை நேரடியாக சந்தித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2ம் தேதி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மற்ற இடங்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.அதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வணிகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார். மேலும் அந்த வழியாக சென்ற பேருந்தில் ஏறியும் கையெழுத்து பெற்றார். மேலும் குடியுரிமை திருத்த சட்டம் பாதிப்புகளையும் மு.க.ஸ்டாலின் அப்போது அவர்களிடம் விளக்கி கூறினார்.

Related Stories: