தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை : முதன்முறையாக உள்துறை அமைச்சகம் விளக்கம்

டெல்லி: நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என மக்களவையில் உள்துறை அமைச்சகம் முதன்முறையாக பதிலளித்துள்ளது.

மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு தற்போதைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும் மக்களிடம் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்ததாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றவே அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு

*தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடைபெறுவது வழக்கம். கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. இப்போது மீண்டும் 2020ம் ஆண்டான இந்த ஆண்டில் நடைபெற உள்ளது.

*ஆனால் கடந்தமுறை மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எந்த பிரச்சனையும் எழாத நிலையில், இந்த முறை தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட உள்ளதாக கூறி அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

அஸ்ஸாமில் போல் இங்கும் நடக்குமோ ?

*ஏனெனில் அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் கொண்டுவரப்பட்டு அதில் இறுதியாக வெளியிடப்பட்ட பட்டியலின்படி சுமார் 19 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.

*அஸ்ஸாம் மாநிலத்தை போல் இந்தியா முழுவதுமே தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

*அதே சமயம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

*இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்று உறுதி அளித்துள்ள மத்திய அரசு என்ஆர்சி குறித்து இதுவரை தெளிவான விளக்கம் அளிக்காமல் இருந்தது.

*இந்நிலையில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என மக்களவையில் உள்துறை அமைச்சகம் முதன்முறையாக பதிலளித்துள்ளது.

Related Stories: