பிரியங்கா காந்தியை மாநிலங்களவை எம்.பி.யாக்க ராஜஸ்தான் முதல்வர் தீவிரம்

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை, மாநிலங்களவை எம்.பி.யாக்கும் முயற்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இறங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  ராஜஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதலில் சச்சின் பைலட் முதல்வராக்க ராகுல் விரும்பினார். ஆனால் இப்பதவியை பிடிப்பதில் கட்சியின் மூத்த தலைவரான அசோக் கெலாட் ஆர்வம் காட்டினார். இந்திரா காந்தி காலம் முதல் காங்கிரசுக்கு விசுவாசமாக இருந்தவர் என்பதால், அசோக் கெலாட்டை முதல்வராக்க சோனியா முடிவெடுத்தார். அப்போது முதல் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் விரைவில் தலைமை ஏற்பார் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால், மீண்டும் சச்சின் பைலட் அணியின் செல்வாக்கு அதிகரிக்கும்.

காங்கிரஸ் மேலிடத்திடம் தனது செல்வாக்கை தொடர்ந்து தக்கவைக்க அசோக் கெலாட் விரும்புகிறார். அதற்காக பிரியங்காவை ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுத்து எம்.பி.யாக்கும் முயற்சியில் அசோக் கெலாட் ஈடுபட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை சோனியா குடும்பத்திடம் இருந்து பெறும் நடவடிக்கையில் கெலாட் இறங்கியுள்ளார்.  பிரியங்கா எம்.பி.யானால் அவரது செல்வாக்கு தேசியளவில் இன்னும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் பல மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரியங்கா எம்.பி.யாவது கூடுதல் பலம் என காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இது குறித்து ராஜஸ்தான் அமைச்சர் ரகு சர்மா கூறுகையில், ‘‘முடிவு பிரியங்காவின் கையில் உள்ளது. அவர் மாநிலங்களவை எம்.பி.யாக விரும்பினால் அது கட்சிக்கு மேலும் வலு சேர்க்கும்’’ என்றார்.

Related Stories: