டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும்: பணியாளர்கள் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும் என பணியாளர்கள் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை உள்ள சித்திபுத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கிடம் பேசிய அவர், குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என உறுதி அளித்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, குற்றவழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குருப்-4 தேர்வில் நடந்த மோசடி பற்றி விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் டி.என்.பி.எஸ்.சி. ஆவண குமாஸ்தா ஓம்காந்தன் உள்பட 16 பேரை கைது செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது இப்போது உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து குரூப் 2ஏ முறைகேடு விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 5 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களில் விக்னேஷ் என்பவர் சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மேலும், சென்னை தலைமை செயலக ஊழியர் திருஞானசம்பந்தன், பத்திர பதிவு துறை அலுவலர் ஆனந்தன் மற்றும் வடிவு ஆகிய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: