ஆழ்துளை கிணறு மரணங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: ஆழ்துளை கிணறு மரணங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜி.எஸ்.மணி என்பவர் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு இது தொடர்பாக உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் இறந்த போது தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ்(40), விவசாயி, விவசாய பணிகள் இல்லாத நேரத்தில் கட்டிட வேலைக்கும் செல்வார். இவரது மனைவி கலாமேரி. இவர்களுக்கு 2 மகன்கள். ஆரோக்கிய ராஜ் வீட்டு அருகே சோளம் சாகுபடி செய்திருந்தார். சோளவயலுக்கு மத்தியில் கடந்த 5 வருடத்திற்கு முன் 600 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தார். அதில் தண்ணீர் வராததால் பிளாஸ்டிக் மூடி போட்டு மூடி வைத்து விட்டார்.

இந்த ஆழ்துளை கிணற்றை தரை மட்டத்திலேயே வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி மாலை 4 மணி அளவில் ஆரோக்கியராஜின் 2வது மகன் சுஜித் வில்சனும், 4 வயது மூத்த மகன் புனித் ரோஷனும், அருகில் உள்ள பெரியப்பா வீட்டுக்கு சோளக்காட்டு வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆழ்துளை கிணறு இருப்பதை அறியாத சுஜித் அதன் மூடி மீது மிதித்து விட்டான். 5 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட மூடி என்பதால் அது உடைந்து சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான். தகவல் அறிந்து ஊர்மக்கள் அங்கு கூடிவிட்டனர். அவர்களே கயிறு கட்டி குழந்தையை எடுத்து விடலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் அது பலனளிக்கவில்லை. முதலில் 5 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித் நேரம் ஆக ஆக குழிக்குள் இறங்கி கொண்டே இருந்தான். இதனை தொடர்ந்து 5 நாளாக தமிழக அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இறுதியில் 5 நாட்களுக்கு பின் குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜி.எஸ்.மணி என்பவர் இது தொடர்பாக மனுத்தாகக்கல் செய்தார். அதில் நாட்டிலுள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து 2010 ஆம் ஆண்டு அதிரடியான தீர்ப்பு வழங்கி அனைத்து மாநிலங்களும் ஆழ்துளை கிணறுகளை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அந்த உத்தரவு எல்லாம் மீருகின்ற வகையில் மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல சம்பவங்கள் நடந்துள்ளது. இனி இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி ஆழ்துளை கிணறு அகற்ற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆழ்துளை கிணறு மரணங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டிஸ் அனுப்பியது.

Related Stories: