குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி திமுக கூட்டணியினர் தீவிர கையெழுத்து இயக்கம்: தயாநிதி மாறன், வைகோ பங்கேற்பு

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொண்டிதோப்பு, சிவஞானம் பூங்காவில் மத்திய சென்னை நாடாளுமன்ற திமுக எம்.பி தயாநிதி மாறன், மதிமுக  பொதுசெயலாளர் வைகோ எம்.பி ஆகியோர் நேற்று காலை கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர். பின்னர் இருவரும் அப்பகுதியில் வீடு வீடாக சென்று, அப்பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்றனர். இந்த கையெழுத்து இயக்கத்துக்கு  ஏராளமான மக்கள் ஆதரவு தெரிவித்து ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். இதைத்தொடர்ந்து மண்ணடி, தம்புசெட்டி தெருவுக்கு தயாநிதி மாறன், வைகோ ஆகிய இருவரும் வீடு வீடாக சென்று கையெழுத்து பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன், மாவட்ட விசிக செயலாளர்  செல்லதுரை, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் உள்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.தயாநிதி மாறன் எம்.பி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகிறார். அப்படியெனில் எடப்பாடி அமைச்சரவையில் உள்ள நிலோபர் கபிலும் தீவிரவாதியா?நெடுஞ்சாலை துறை தனியார்மயமாக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இது, மக்களை ஏமாற்றும் பட்ஜெட்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் ஜெயக்குமார் அமைதியாக இருப்பது, அவர் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த முறைகேட்டுக்கு அமைச்சர் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றார்.இந்த நிகழ்ச்சியில் திமுக பகுதி செயலாளர்கள் முரளி, ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் கவுன்சில் போஸ் உள்ளிட்ட திமுக கட்சியினர், கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வைகோ கூறுகையில், ‘‘பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து இந்தியாவை இந்துத்துவா நாடாக மத்திய பாஜ அரசு முயற்சிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சக்தி கிளர்ந்து எழும்போது, அவர்களை எந்த அரசினாலும் கட்டுப்படுத்த  முடியாது’’ என்றார்.திருவொற்றியூர்: திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்க போராட்டம் நேற்று நடைபெற்றது. பகுதி செயலாளர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். சமத்துவ மக்கள் கழக தலைவர்  எர்ணாவூர் நாராயணன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் குறிஞ்சி கணேசன், பொன்னிவளவன், ஆதி குருசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் ஜெயராமன் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள்  கலந்து கொண்டு அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்களிடம் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து பெற்றனர்.

ராயபுரம்: சென்னை வடக்கு மாவட்டம், ராயபுரம் கிழக்கு பகுதி செயலாளர் செந்தில்குமார் ஏற்பாட்டில் வடக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் சுதர்சனம் தலைமையில் ராயபுரம் அறிவகம் திருமண  மண்டபத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.இதில் திருமண கோலத்தில் வந்த பகுதி இளைஞரணி துனை அமைப்பாளர் மணமகன் அறிவுச்செல்வன், மணமகள் பிரஷாந்தி மற்றும் சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏர்ணாவூர் நாராயணன், காங்கிரஸ் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  உ.பலராமன், வடசென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரவியம் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன். வக்கீல்கள் அணி அமைப்பாளர் மருதுகணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: