72-வது நினைவு தினம் மகாத்மா காந்திக்கு தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. துப்பாக்கி குண்டு முழங்க அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், பாஜ மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி லம்பா, விமான படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதுரியா, ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே உள்ளிட்டோரும் காந்தி நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து காந்தியின் விருப்ப பாடலான ரகுபதி ராகவ ராஜா ராம் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் தலைவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பலரும் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

Related Stories: