பிப். 12ம் தேதி சிறப்பு கூட்டம்: புதுச்சேரி சட்டமன்றத்திலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்?

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். மத்திய அரசின் போதிய நிதி கிடைக்காதது, பட்ஜெட்டுக்கு காலதாமதமான அனுமதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மார்ச் முதல் ஜூலை மாதம் வரையிலான 5 மாத செலவினங்களுக்கு முன் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 26ம் தேதி புதுச்சேரி சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி ரூ. 8425 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.

Advertising
Advertising

6 மாதத்துக்கு ஒருமுறை சட்டமன்றத்தை கூட்டுவது மரபு, அதன்படி பிப்ரவரி மாதம் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை அடுத்த மாதம் 12ம் தேதி மீண்டும் கூடவுள்ளதாக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக செயலர் வின்சென்ட் ராயர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரி சட்டசபை 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம்தேதி(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டசபை மண்டபத்தில் கூட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எம்எல்ஏக்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 14வது சட்டசபையில் சிறப்பு சட்டசபை கூட்டம் கூடவுள்ளதாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் ஓரிரு நாட்கள் மட்டுமே நடைபெறும் என தெரிய வருகிறது. இதில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை மாநிலத்துக்கு ஏற்ப திருத்தம் கொண்டு வந்து சட்டமாக்கி கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதற்கேற்ப இந்த அவசர சட்ட திருத்தம் உள்துறையின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனை மீண்டும் சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளனர். அதேபோல் கேரளாவை தொடர்ந்து, புதுச்சேரியிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய மக்கள் குடிமக்கள் பதிவேடு சட்டத்தை திரும்பப்பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என தெரியவந்துள்ளது.

கவர்னர் கிரண்பேடி ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து பல்வேறு அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றவும், முடிவு எடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories: