சேலம் அருகே சூரியூர் பள்ளக்காடு கிராமத்தில் குடிசை வீடுகள் இடித்து அகற்றம்: வன கிராம மக்கள் கடும் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பால் பதற்றம்

சேலம்: சேலம் அருகே சூரியூர் பள்ளக்காடு வனக்கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து குடிசை வீடுகள் அமைத்திருப்பதாக கூறி, அதனை இன்று காலை வனத்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தினர். இதற்கு வன கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை அடுத்துள்ள ஜல்லூத்துமலை, ஜருகுமலைக்கு இடைப்பட்ட பகுதியில் சூரியூர் பள்ளக்காடு வனக்கிராமம் உள்ளது. காப்பு காட்டில் அமைந்துள்ள இக்கிராம பகுதி நிலம், வனத்துறைக்கு சொந்தமானது , அதனால் அப்பகுதியை காலி செய்ய வேண்டும் என கிராம மக்களிடம் வனத்துறை அறிவுறுத்தியது. ஆனால், ஆண்டாண்டு காலமாக வசித்து வரும் நாங்கள், இந்த வனக்கிராமத்தை காலி செய்யமாட்டோம் எனக்கூறினர். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

Advertising
Advertising

15 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் நடந்து வந்தநிலையில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டில் குடியிருப்புகள் இருந்தால், அதனை அப்புறப்படுத்திக் கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, பள்ளக்காட்டில் உள்ள வனகிராம மக்களின் குடியிருப்பை காலி செய்ய வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனிடையே சூரியூர் பள்ளக்காட்டில் வன உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அக்கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் 70 குடும்பத்தினர் மாவட்ட கலெக்டரிடம்  மனு கொடுத்தனர். வனத்துறை அதிகாரிகளிடமும் இக்கோரிக்கை மனுவை கொடுத்தனர். ஆனால், வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் பள்ளக்காடு பகுதி முழுவதும் காப்பு காடு பகுதியாகும். அதனால், அந்த இடத்தை குடியிருக்கும் நபர்கள் காலி செய்ய வேண்டும் என கூறினார்.

இதுதொடர்பாக கடந்த வாரம், பள்ளக்காட்டில் உள்ள 7 குடிசை வீடு, 7 தகர கொட்டகை வீடுகளில் வசிக்கும் நபர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர். அதில், 27ம் தேதிக்குள் (இன்று) வீடுகளை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். ஆனால், அக்கிராம மக்கள் வீடுகளை காலி செய்யாமல் தொடர்ந்து இருந்தனர். இதையடுத்து இன்று காலை, மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, சேலம் ஆர்டிஓ மாறன் தலைமையில் வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சூரியூர் பள்ளக்காடு கிராமத்திற்கு சென்றனர். டிஎஸ்பி உமாசங்கர் தலைமையில் 100 போலீசாரும், சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சரவணன் தலைமையில் 50 வனத்துறை ஊழியர்களும் குவிக்கப்பட்டனர். பின்னர், வனத்துறை ஆக்கிரமிப்பு எனக்கூறி 7 குடிசை, 7 தகர கொட்டகை என 14 வீடுகளையும் இடித்து அப்புறப்படுத்தினர். அப்போது, முருகேசன் தலைமையில் வனக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வனக்கிராமத்தை சேர்ந்த முருகேசன் கூறுகையில், “பல ஆண்டுகாளாக நாங்கள் வசிக்கும் வனக்கிராமத்தை காலி செய்ய கூடாது எனவும், தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் கேட்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். அதில், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில், வன உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அக்கிராம மக்களின் கோரிக்கையை உட்கோட்ட கமிட்டி, மாவட்ட கமிட்டி, மாநில கமிட்டி பரிசீலித்து பட்டா வழங்கலாம் என அறிவுறுத்தியது. ஆனால், வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் எங்கள் கோரிக்கை மனுவை ஏற்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை. அப்படிபட்ட சூழலில் நீதிமன்ற உத்தரவை மீறி வீடுகளை காலி செய்ய வந்துள்ளார்கள். எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், நாங்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட வாய்ப்பு உள்ளது. அதனை அதிகாரிகள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்,’’ என்றார்.

மாவட்ட வன அலுவலர் பெரியசாமி கூறுகையில், “வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி வைத்துள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு ஒருமுறை ஆக்கிரப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டது. ஆனால், மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமித்து வீடு அமைத்துள்ளனர். அதனால் தற்போது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு படி வீடுகளை அகற்றியுள்ளோம். இனி இந்த காப்பு காட்டில் மரக்கன்னுகள் நடப்படும்,’’ என்றார்.

Related Stories: