இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் வகையில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு: நவீன போர் விமானங்கள் பங்கேற்பு: நாடு முழுவதும் குடியரசு தின கோலாகலம்

புதுடெல்லி: நாட்டின் 71வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிவைத்து, நாட்டின் வலிமையை பறைசாற்றும் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 71வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் நடந்த விழாவில் பிரேசில் அதிபர் ஜெயிர் மெஸ்சியாஸ் போல்சோனரோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
Advertising
Advertising

ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரேசில் அதிபர் ஜெயிர் ஆகியோரை குதிரைப் படை வீரர்கள், டெல்லி ராஜபாதையில் உள்ள விழா மேடைக்கு ்அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வந்தனர். அவர்களை பிரதமர் மோடி, காவி நிற தலைப்பாகை அணிந்து வரவேற்றார். தேசியக் கொடியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றியதும், தேசிய கீதம் முழங்கப்பட்டது. அப்போது ராணுவ வீரர்கள் 21 பீரங்கி குண்டுகளை சுட்டு மரியாதை செலுத்தினர். அதன்பின் ராணுவத்தின் பிரமாண்ட அணிவகுப்பு நடந்தது. அதன் மரியாதையை ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட‘டி-90 பீஷ்மா’ பீரங்கி, கே-9  வஜ்ரா, தனுஷ் பீரங்கி, ‘ஆகாஷ்’ ஏவுகணை ஆகியவை அணிவகுப்பில் பங்கேற்றன.

கடற்படை சார்பில் விமானம் தாங்கி போர்க் கப்பல்கள், கண்காணிப்பு விமானங்களின் மாதிரிகள் இடம் பெற்றன. விமானப்படை சார்பில் பிரான்சிடம் இருந்து சமீபத்தில் வாங்கப்பட்ட அதிநவீன ரபேல் போர் விமானம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம், ‘அஸ்த்ரா’ ஏவுகணை, எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை அழிக்கும் திறனுள்ள ‘ஏசாட்’  ஏவுகணை ஆகியவையும் அணிவகுப்பில் இடம் பெற்றன. முப்படை வீரர்கள், துணை ராணுவப்படை வீரர்கள் ஆகியோருடன் என்சிசி மாணவர்களும் அணிவகுத்து வந்தனர். எல்லை பாதுகாப்பு படையினரின் ஒட்டகங்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

30 ஆயிரம் கொடிகள் வழங்கி ஏர் இந்தியா கொண்டாட்டம்

குடியரசு தினவிழாவை முன்னிட்டு பெருநகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் நகரில் உள்ள விமான நிலையத்தில் பயணிகளுக்கு 30 ஆயிரம் தேசியக் கொடிகளை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கியது. இந்த கொடிகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதத்தில் வெந்தையம், சாமந்திப்பூ விதைகளுடன் தயாரிக்கப்பட்டிருந்தது. இவற்றை தண்ணீரில் நனைத்து மண்ணில் புதைத்து வைத்தால் முளைக்கும். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சஹாரியா பழங்குடியினர் கைகளால் இந்த கொடியை தயாரித்தனர். சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு நகரில் நேற்று முதல்முறையாக குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஏர் இந்தியா சார்பில் நகரின் லால் சவுக் பகுதியில் பிரம்மாண்ட பேனர் வைத்து, குடியரசு தினவிழா வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தேசிய போர் நினைவிடத்தில் முதல் முறையாக அஞ்சலி

நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் வகையில், இந்தியா கேட்  பகுதிக்கு அருகிலுள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி, மலர் வளையம்  வைத்து அஞ்சலி செலுத்தினார். 40 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்ட இந்த  பிரம்மாண்ட நினைவிடத்தை பிரதமர் மோடி கடந்தாண்டு பிப்ரவரி 25ம் தேதி  தொடங்கி வைத்தார். இந்த நினைவிடத்தில் நாட்டுக்காக உயிர் நீத்த 25,942  வீரர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.  இதற்கு முன்பு இந்தியா கேட் கீழ்  இருக்கும் அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில், அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கமாக  இருந்தது. ஆனால், இந்தாண்டு முதல் முறையாக, தேசிய போர் நினைவிடத்தில்  பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தினவிழாவில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, டெல்லியில் பாதுகாப்பு படையினர் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வானில் 20க்கும் மேற்பட்ட டிரோன்கள் பறக்க விடப்பட்டு கண்காணிக்கப்ப்டடது.  நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் பல இடங்களில்  நிறுவப்பட்டு பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டது. விமான எதிர்ப்பு துப்பாக்கிகளுடன் பாதுகாப்புப் பணியாளர்கள் ராஜ்பாத் பகுதியில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். ராஜ்பாத்தில் இருந்து செங்கோட்டை வரை எட்டு கிமீ நீளமுள்ள அணிவகுப்பு பாதையை கண்காணிக்க உயரமான கட்டிடங்களில் குறிபார்த்து சுடும் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்தை சீராக்கும் பணியில் 2,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

நடந்து சென்று பிரதமர் மோடி வாழ்த்து

அணிவகுப்பு முடிந்ததும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரேசில் அதிபர் ஜெயிர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். அதன்பின் பிரதமரை ஏற்றிச் செல்ல அவரது கார் வந்தது. ஆனால், அதில் ஏறாமல், ராஜபாதையில் வெகு தூரம் நடந்து சென்று இரு பக்கத்திலும் இருந்த மக்களுக்கு வாழ்த்தும், வணக்கமும் தெரிவித்தபடி பிரதமர் மோடி சென்றார். அவருடன் மக்களும் உற்சாகமாக கையசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.  இதனால், மத்திய அமைச்சர்கள், மற்ற விஐபி.க்கள் புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

உலகம் முழுவதும் கொண்டாட்டம்

இந்திய குடியரசு தினவிழாவை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களும் உற்சாகமாக கொண்டாடினர். இலங்கையி–்ல உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மகிந்தா ராஜபக்சே தனது மனைவியுடன் கலந்து கொண்டார். இதேபோல், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா உட்பட உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அய்யனார் சிலையுடன் தமிழக அலங்கார ஊர்தி

பல மாநிலங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் 22 அலங்கார அணிவகுப்பு ஊர்திகளும் அணிவகுப்பில் கலந்து கொண்டன. இவற்றில் 16 வாகனங்கள் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பில் கலந்து கொண்டன. 6 வாகனங்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கலந்து கொண்டன. தமிழக அரசு சார்பில் வந்த அலங்கார ஊர்தியில் 17 அடி உயர பிரம்மாண்ட அய்யனார் சிலை இடம் பெற்றது. தமிழக கிராமங்களில் அனைத்து ஜாதியினரும் வழிபடும் பொதுவான காவல் தெய்வமாக அய்யனார் இருப்பதால், தமிழக அலங்கார ஊர்தியில் இந்த முறை அய்யனார் இடம் பெற்றார். தமிழக கலைஞர்கள் மேள, தாளங்கள், தாரை, தப்பட்டைகளுடன் நடனமாடி பார்வையாளர்களை அசத்தினர்.

போர் விமானங்கள் சாகசம்

அணிவகுப்பின் கடைசி நிகழ்ச்சியாக விமானப்படை போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பல வகை விமானங்கள் அம்பு குறி போல் அணி வகுத்து வந்தன. அமெரிக்காவிடம் இருந்து சமீபத்தில் வாங்கப்பட்ட அப்பாச்சி, சினுக் ரக ஹெலிகாப்டர்களும் ராஜபாதையில் இந்தாண்டு முதல் முறையாக அணிவகுத்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தன. மூன்று சுகாய் ரக போர் விமானங்கள் ஒன்றாக அணிவகுத்து வந்து, பின் வெவ்வேறு திசையில் சுழன்று சென்றன. நடுவில் வந்த விமானம் 90 டிகிரி கோணத்தில் மேலே உயர்ந்து சென்று பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தன. பின் தனியாக வந்த சுகாய் விமானம் ஒன்று வானில் பல முறை சுழன்று பல்டியடித்து அசத்திச் சென்றது.

Related Stories: