டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபை கூட்டங்களில் தீர்மானம்; சேலத்தில் மதுக்கடைக்கு எதிராக தீர்மானம்

தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவிரிப்படுகையை 2 மண்டலங்களாக பிரித்து மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. பிரிவு 1ல் விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள், பிரிவு 2ல் கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதன்பின், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், மாணவர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்நிலையில், 5வது ஏலத்திற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. மார்ச் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில், மொத்தம் 19,789 சதுர கி.மீ. பரப்பளவில் 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதற்கான உரிமங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் 4,064.22 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள ஒரு திட்டம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கிறது.புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலும், தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் செயல்படுத்துவதால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.  டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைப்பதில் ‘ஏ கிரேடு’, ‘பி கிரேடு’ என பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ கிரேடு’ அமையும் பகுதியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.

சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற வேண்டும் என விதி உள்ளது. அதை மத்திய அரசு மாற்றி ‘பி கிரேடு’ என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில்  நாட்டின் 71வது குடியரசு தின விழா, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தஞ்சை கத்தரிநத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று தஞ்சை அழகிய நாயகிபுரம் கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர், இருள்நீக்கி கிராமங்களிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைக்கு எதிராக தீர்மானம்

சேலம் மாவட்டம் புலாவாரி உள்ளிட்ட கிராமங்களில் 8 வலைச்சாலைக்கு எதிராக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டது. டாஸ்மாக் கடைகளை தங்கள் ஊரில் திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்த தீர்வு காணவும், எட்டு வழிச்சாலைக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: