71-வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: 71வது குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித்: இந்திய அரசியலமைப்பு உருவாவதற்கு உன்னதப் பங்களிப்பு செய்த விடுதலைப் போராட்ட வீரர்கள், சட்டமியற்றிய மேதைகள் யாவரையும் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம். இந்திய அரசியல் அமைப்பின் உன்னதக் குறிக்கோளைப் பாதுகாத்திடும் வகையில் நம் வாழ்வின் மூச்சு, செயல் ஆகியவற்றை அர்ப்பணித்து, தேசத்தின் பெருமையைக் கட்டிக்காப்பதில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முன்வருவோமாக என வாழ்த்துகின்றேன்.

கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்): 71வது இந்திய குடியரசு  தினத்தில், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள நோக்கங்களை  பாதுகாக்கிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஒவ்வொரு குடிமகனும்  இந்நாளில் சூளுரை ஏற்க வேண்டும். இத்தகைய சூளுரையின் மூலமே 130 கோடி  மக்களுடைய நலனையும், உரிமைகளையும் பாதுகாக்க முடியும் என்று காங்கிரஸ்  கட்சி கருதுகிறது. அனைத்து மக்களும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்க  வேண்டும். அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): சாதி, மத, இன, மொழி ஆகிய பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு செயல்பட்டு இந்திய நாட்டில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் துணைநிற்போம். ஒன்றுபடுவோம், செயல்படுவோம், இந்திய நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பை பாதுகாப்போம்.

டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்): ஜனநாயகத்திற்கு தீங்கு எதுவும் நேராமல் போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை. யாரையும் காயப்படுத்தாமல், எல்லோருடைய உரிமைகளையும் சுதந்திரத்தையும் பேணி பாதுகாத்து ஒற்றுமையோடு வாழ்வதற்கான உறுதியை இந்த நல்ல நாளில் அனைவரும் எடுத்துக் கொள்வோம். இந்தியாவின் மிகப் பெரிய பலமான ஜனநாயகத்தைக் கொண்டு தேசத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான பணிகளில் ஈடுபடுவோம்.

வி.எம்.எஸ்.முஸ்தபா(தழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்): இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததையும், ஜனநாயகத்தின் சாராம்சத்தையும் இந்நாள் நமக்கு நினைவுபடுத்துகிறது. மக்கள் நாட்டின் எஜமானர்கள் என்பதுதான் குடியரசின் பொருள். தேசவளம், தொழில்நுட்பத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம். மதம், ஜாதி, இனம், மொழி, கலாசாரம் என பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர் என்ற ஒரே சொல்லில் நாம் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளோம். இதற்கு குந்தகம் விளைவிப்போரை வீழ்த்தி புதிய இந்தியா படைக்க குடியரசு நாளில் உறுதியேற்போம்.

என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்): உண்மையான ஜனநாயகம் மலரவும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பேணி காக்கவும், மக்கள் விரும்பும் மக்களாட்சி தொடரவும், நாம் அனைவரும் இந்தியன் என்ற ஒற்றுமை உணர்வுடன் தேசப்பற்று கொண்டவராகவும் இருந்து உலகில் தலைசிறந்த பாரதத்தை உருவாக்கிட இந்த குடியரசு தினத்தில் சபதமேற்போம். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

இதேபோல், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் என்.நாராயணன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழக தலைவர் எம்ஜிஆர் நம்பி,

அகில இந்திய ரியல் எஸ்டேட்  கூட்டமைப்பின் நிறுவனர்-தேசிய தலைவர் ஏ.ஹென்றி, திராவிட மனித சங்கிலி இயக்க தலைவர் செங்கை பத்மநாபன், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, தமிழ் மாநில கட்சி தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை கண்ணன், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன், நாடார் மக்கள் சக்தி தலைவர் ராக்கெட் ராஜா, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்ட தலைவர்களும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Related Stories: