வழிப்பறி செய்ததை தடுத்ததால் சுங்கச்சாவடி காவலாளி அடித்து கொலை: பைக்கில் வந்த கும்பல் வெறிச்செயல்

சென்னை:     வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வழியாக செல்லும் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் சமீபகாலமாக அடிக்கடி லாரி டிரைவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகளிடம் மர்ம நபர்கள் தொடர்ந்து, வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த சாலையில் பூந்தமல்லி அடுத்த சித்துக்காடு பகுதியில் 3 பேரை பைக்கில் வந்த இரு வாலிபர்கள் வழிமறித்துள்ளனர். பின்னர், அவர்களிடமிருந்து செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு கத்தியால் வெட்டிவிட்டு சென்றுள்ளனர்.  மேலும் அதே நபர்கள் பட்டாபிராம் அடுத்த ராமாபுரம் பகுதியில் உள்ள வெளிவட்ட சாலை பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு வந்த வேப்பம்பட்டு, ஈஸ்வரன் கோயில் 3வது தெருவை சேர்ந்த அசோக் (28) என்ற ஐ.டி ஊழியரை வெட்டி புல்லட், செல்போன் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை பறித்துக்கொண்டு ஆவடி, முத்தாபுதுப்பேட்டை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுங்கச்சாவடிக்கு வந்துள்ளனர்.

Advertising
Advertising

அங்கு வாகன பார்க்கிங் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதில் ஒரு கொரியர் லாரியில் வேலூர், காட்பாடி பகுதியை சேர்ந்த சிவகுமார் (38) என்பவர் தூங்கிக் கொண்டிருந்தார்.  இதை பார்த்த ஆசாமிகள் லாரியின் முன்பக்க கண்ணாடியை இரும்பு ராடால் உடைத்துள்ளனர். உடனே, தூங்கிக்கொண்டிருந்த சிவகுமார் எழுந்து வந்துள்ளார். அப்போது, மர்ம நபர்கள் சிவகுமாரை இரும்பு ராடால் அடித்துள்ளனர். இதில் சிவகுமார் மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை அவர்கள் பறித்துள்ளனர்.  இதனை பார்த்து சுங்கச்சாவடியில் இரவு பணியில் இருந்த காவலாளி திருநின்றவூர், பிரகாஷ் நகர் 16வது தெருவை சேர்ந்த  வெங்கடேசன் (50) ஓடி வந்து தடுத்துள்ளார்.

ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் இரும்பு ராடால் சரமாரியாக வெங்கடேசன் தலையில் தாக்கினர். இதில் வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

பிறகு மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி, மற்றொரு கொரியர் வேனில் தூங்கிக்கொண்டிருந்த திண்டிவனத்தை சேர்ந்த நரேஷ்குமார் (22) என்பவரை இரும்பு ராடால் அடித்து செல்போன் மற்றும் 4 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினர்.

இதுகுறித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றதை தொடர்ந்து முத்தாபுதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், இரவு ரோந்து பணியில் இருந்த திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த கொரியர் வேன் டிரைவர் சிவக்குமார், ஐ.டி ஊழியர் அசோக் உள்பட 5 பேரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை, பட்டாபிராம், வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இருவரிடம் விசாரணை:

கொலை நடந்த இடங்களை நேற்று காலை அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், பட்டாபிராம் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் பார்வையிட்டனர். மேலும், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக வேப்பம்பட்டு, கலைஞர் நகரை சேர்ந்த ஜெபராஜ் (28), திருநின்றவூர், பவானி நகரை சேர்ந்த சுரேஷ் (20) ஆகிய இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: