பர்கூர் அருகே விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், சிவாடியில் டீசல், பெட்ரோல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படவுள்ளது. இதற்கான குழாய்கள் அமைக்கும் பணி ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் தொடங்கி நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 82 கி.மீ. நீளத்திற்கு இந்த குழாய்கள் பதிக்கப்படவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 43 கி.மீ. நீளம் குழாய் பதிக்கப்படுகிறது. பர்கூர் தாலுகாவி 2 கிலோ மீட்டர் தூரம், விவசாய பட்டா நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்படுகின்றன.

இந்த விளைநிலங்களில், எண்ணெய் குழாய்கள் பதிப்பதற்கு முன்னோட்டமாக, நிலங்களை அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. திட்ட அலுவலர் சீனிவாசன் தலைமையிலான பணியாளர்கள், நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டனர். இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள், அங்கு முற்றுகையிட்டு எண்ணெய் குழாய் பதிப்பு பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த பர்கூர் தாசில்தார் சித்ரா, கந்திக்குப்பம் போலீசார்  விரைந்து சென்று, விவசாயிகளை சமரசப்படுத்தினர். இந்த திட்டத்தால், பாதிக்கப்படுவோருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Related Stories: