கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் பேரவையில் நாளை சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்: துணை முதல்வர் சச்சின் பைலட் தகவல்

ஜெய்ப்பூர்: கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சிஏஏ) எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த  சட்டத்திற்கு கேரளா சட்டசபையில் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக கூறி, சிஏஏ-வை மத்திய அரசு திரும்பப் பெற அந்த தீர்மானம் வலியுறுத்தியது. தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும்  சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நாளை (ஜன. 25) நிறைவேற்றப்பட இருக்கிறது.

இது தொடர்பாக ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறுகையில், ‘‘ராஜஸ்தான் சட்டசபையில் சிஏஏ-வுக்கு எதிராக நாளை தீர்மானம் கொண்டுவரப்படும். மத்திய அரசு சிஏஏ குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். இச்சட்டத்துக்கு  எதிராக போராடுகிற உரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. ஆனால் இப்படி போராட்டம் நடத்துகிறவர்களை தேசவிரோதிகளாக முத்திரை குத்துகிற போக்கு நிலவுகிறது. இப்போராட்டங்கள் ஒரு கட்சியினரால் நடத்தப்படவில்லை.  பல்வேறு அமைப்புகள் இப்போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதுகுறித்து மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதற்கிடையே, வருகிற 27ம் தேதி மேற்குவங்க சட்டப் பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என்று, அம்மாநில முதல்வரும், திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்தது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: