படுகரின கிராமங்களில் ‘தொட்டஹப்பா’ பண்டிகை: கில்லி, கும்மி விளையாடி மகிழ்ந்தனர்

மஞ்சூர்: நீலகிரி மாவட்ட படுகரின கிராமங்களில்  ‘தொட்டஹப்பா’ பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது எடக்காடு. படுகரின மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் கால்நடைகளுக்கு காணிக்கை செலுத்தும் ‘தொட்ட ஹப்பா’ பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி படுகரின மக்கள் தங்களுக்கு  சொந்தமான பசுமாடுகளை குளிப்பாட்டினார்கள். தொடர்ந்து ஊர் சின்னகணிகே தலைவர் பெள்ளிகவுடர் தலைமையில் மேள,தாளங்களுடன் பொதுமக்கள் தொட்டமனையில் இருந்து ஊர்வலமாக உப்பு எடுத்து வந்தனர். இந்த உப்பை விநாயகர்  கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்ட குழிகளில் போட்டு கால்நடைகளுக்கு உப்புநீர் வழங்கப்பட்டது. இதனுடன் பொத்திட்டு எனப்படும் கோதுமை தோசைகளையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் பசுமாடுகளின் கால்களில் விழுந்து காணிக்கை செலுத்தினார்கள். பொதுவாக ஜனவரி மாதம் பனி தாக்கத்தால் கடும் வறட்சி நிலவும். வறட்சியால் செடி, கொடிகள், புல்வெளிகள் காய்ந்து கால்நடைகளுக்கு  தீவன தட்டுப்பாடு ஏற்படும். இதை தவிர்க்க பொங்கல் பண்டிகை முடிந்ததும் அனைத்து கிராமங்களிலும் கால்நடைகளுக்கு காணிக்கை செலுத்தி அவற்றை வழிபடுவதன் மூலம் வறட்சி நீங்கும் .இதை முன்னோர்கள் காலத்தில் இருந்து  தொன்றுதொட்டு கடைபிடித்து வருவதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பண்டிகையையொட்டி பாரம்பரியமாக விளையாடும் கில்லி, கும்மி விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.  இதேபோல் மஞ்சூர் அருகே உள்ள கரியமலை, குந்தா தூனேரி, முள்ளிமலை உள்பட சுற்று வட்டார படுகரின கிராமங்களில் ‘தொட்டஹப்பா’ பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Related Stories: