தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 17% குறைவு: ஆள்மாறாட்டம் கண்டுபிடிப்பு, கட் ஆஃப் அதிகரிப்பும் காரணம் என தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 17 சதவிகிதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. 2016ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டில் தான் நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது குறைந்திருக்கிறது. ஆள்மாறாட்டம் கண்டுபிடிப்பு, கட் ஆஃப் அதிகரிப்பும் தான் இதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 2020ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 17 சதவீதம் குறைந்துள்ளது. 2016 - 2017ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தான் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. கட் ஆஃப் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு சவாலாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மருத்துவ படிப்புகளுக்கு இடங்கள் குறைவாக இருப்பதும், மாணவர்கள் விண்ணப்பிப்பது அதிகமாக இருப்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அத்தேர்வை எழுத மாணவர்களிடையே ஆர்வம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் தேசிய அளவில் நடப்பாண்டில் 74 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருப்பதும் தெரியவந்துள்ளது. 2016 - 2017ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து 88 ஆயிரத்து 881 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அடுத்து 2017 - 2018ம் ஆண்டில் சுமார் 1 லட்சத்து 31 ஆயிரம் மாணவர்களும், 2018 - 2019ம் ஆண்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் 2019 - 2020ம் ஆண்டில் நீட் தேர்வுக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்களே விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டை விட சுமார் 23 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.

நடப்பாண்டில் தேசிய அளவில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்ததில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவை சேர்ந்த 2 லட்சத்து 28 ஆயிரத்து 829 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அடுத்ததாக உத்திரபிரதேச மாநிலத்தில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 705 மாணவர்களும், ராஜஸ்தானில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 140 மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதேபோல கர்நாடகாவில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 626 மாணவர்களும், தமிழகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 502 மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு மருத்துவ படிப்பிற்கு கூடுதல் இடங்கள் கிடைக்கவுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: