மாநகரில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தி சாலை: மாநகராட்சி அதிரடி திட்டம்

கோவை:  கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தார் கலவையில், பறிமுதல் செய்த பிளாஸ்டிக்குகளை பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோவை நகரில் 4500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில் சுமார் 800 கி.மீ. சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கிறது. குடிநீர் குழாய் பதித்தல், பாதாள சாக்கடை திட்டம், தெருவிளக்கு அமைத்தல், பழுதான மின் கம்பிகளை சரிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு  அடிக்கடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் தோண்டுப்படுகின்றன. மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாலைகள் மழை காரணமாகவும், பராமரிக்காமல் இருந்ததன் காரணமாகவும் மாநகரில் பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. மாநகராட்சி நிர்வாகத்தால் சாலை மோசமாக உள்ள பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட இடத்தில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள்  நடந்து வருகிறது.

Advertising
Advertising

இதனிடையே மாநகராட்சி நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டு பறிமுதல் செய்த  பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில், அதை பயன்படுத்தி பிளாஸ்டிக் ரோடு போட முடிவு செய்யப்பட்டது. அதாவது சாலை அமைக்க பயன்படுத்தும் தாரில் 5 சதவீதம் பிளாஸ்டிக்குகளை துகள்களாக மாற்றி அதனை கலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பறிமுதல் செய்யப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் கம்பெனியில் வாங்கிக் கொள்கின்றனர். இருந்தாலும், பிளாஸ்டிக் கழிவுகள் முழுவதுமாக வாங்கப்படுவது இல்லை. கடந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரம் டன் பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 13 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாநகராட்சியில் உள்ளது. இதனை தார் கலவையில், 5 சதவீதம் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாதம் 2 டன் அளவு பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை அரைத்து அதனை துகள்களாக மாற்ற உள்ளோம்” என்றார்.

20,778 கிலோ பறிமுதல்

கோவை மாநகரில் கடந்த ஆண்டு 72 ஆயிரத்து 416 கடைகள் மற்றும் ஒட்டல்களில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 20 ஆயிரத்து 778 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்த உரிமையாளர்களுக்கு ரூ.30 லட்சத்து 46 ஆயிரத்து 700 அபராதமும் விதிக்கப்பட்டது

Related Stories: