தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டும் : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ‘‘தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்துவதற்கு இந்து அறநிலையத்துறை பதில் அளிக்கவேண்டும்’’ என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் பெரிய கோயில் சைவ முறை வழிபாட்டுத் தலமாகும். கோயிலில் பிப்ரவரி 5-ல் குடமுழுக்கு விழா நடக்கிறது. சைவ வழிபாட்டுத்தலமான இங்கு தமிழ் மறை வேதப்படிதான் குடமுழுக்கு நடத்த வேண்டும். தமிழரின் கட்டிடக்கலை ஆதாரமாக விளங்குவதால் தமிழில் குடமுழுக்கு நடத்துவதே சரியாக இருக்கும். எனவே, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில், ‘‘குடமுழுக்கு விழாவின்போது பிப்ரவரி 1 முதல் 5 வரை தமிழில் திருமுறை பாராயணம் நடைபெறும்’’ என கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில், ‘‘குடமுழுக்கு நிகழ்ச்சியை தமிழில் நடத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். முன்பு தமிழில் நடத்தப்பட்டதற்காக கல்வெட்டு சான்றுகள் உள்ளன’’ என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கு இந்து அறநிலையத்துறை சார்பில் பதில் மனுதாக்கல் செய்யவேண்டும்’’ என்று உத்தரவிட்டு, ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவோடு சேர்த்து பட்டியலிடுமாறு கூறி விசாரணையை வருகிற 27-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: