டிக்டாக் மூலம் பழகிய பெண்ணுடன் கணவர் ஓட்டம்: மீட்க கோரி எஸ்பியிடம் மனைவி மனு

கடலூர்: டிக்டாக் மூலம் பழகிய இளம்பெண்ணுடன் ஓடிய கணவரை மீட்டு சேர்த்து வைக்க வேண்டும் என்று எஸ்பியிடம் மனைவி கண்ணீரோடு புகார் மனு அளித்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (28). இவரின் மனைவி சுகன்யா(25). இவர்களுக்கு 3 வயதில் தர்ணிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜசேகருக்கு டிக்டாக் மூலம் பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் ஒரு பெண்ணை திருமணமும் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் ஆதரவின்றி தவித்த சுகன்யா தன் கைக்குழந்தை மற்றும் உறவினர்களுடன் நேற்று கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

Advertising
Advertising

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: என் கணவர் ராஜசேகர் டிக்டாக் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றின் மூலம் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். பெண்களுடன் அவர் நெருக்கமாக உள்ள டிக்டாக் படங்கள் எனக்கு மனவேதனையை அளித்தது. இது தொடர்பாக அவருக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது. மேலும் கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் என்னை அடித்து துன்புறுத்தினர். இதுதொடர்பாக நான் காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் கணவரை அழைத்து விசாரணை நடத்தி, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் திருந்தவில்லை.

டிக்டாக் மூலம் பழக்கமான புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் அவர் ஓடி விட்டார். இது தொடர்பாக அறந்தாங்கி காவல்நிலைய போலீசார் என்னிடம் விசாரித்தனர். கணவர் ஓடி விட்டதால் நானும் என் குழந்தையும் ஆதரவின்றி தவிக்கிறோம். இது சம்பந்தமாக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். ஆன்லைன் மூலம் புகார் மனு அளித்தேன். மேலும் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன்.  இதுவரை புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கணவரை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: