குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட 144 மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான 144 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தபடுகிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற உத்தரவிடக் கோரியும், குடியுரிமை திருத்த சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்தும் பல்வேறு கட்சிகள் மற்றும் தனிநபர்கள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேசமயம், குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புதான் என உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான அனைத்து மனுக்களும், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணை வருகிறது. முன்னதாக 2019 டிசம்பர் 18ம் தேதியன்று குடியுரிமை திருத்த தொடர்பான மனுக்கள் முதலில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து குறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் அரசின் தலைமை வழக்கறிஞர் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணு கோபாலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அப்போது 60 மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மேலும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்யக்கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: