தைப்பூச விழாவிற்கு வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு 50 ஆயிரம் ஒளிரும் பட்டைகள்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

பழநி: தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்கு 50 ஆயிரம் ஒளிரும் பட்டைகள் வழங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா வரும் பிப்ரவரி 2ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். பழநி கோயில் செயலர் ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தார். உதவி ஆட்சியர் மதுபாலன், மாவட்ட எஸ்பி சக்திவேல், பழநி சப்.கலெக்டர் உமா, தாசில்தார் பழனிச்சாமி, பழநி கோயில துணை ஆணையர் செந்தில்குமார், டிஎஸ்பி விவேகானந்தன் மற்றும் போக்குவரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பழநி கோயிலுக்கு தைப்பூச பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக 50 ஆயிரம் ஒளிரும் பட்டைகள் மற்றும் ஒளிரும் குச்சிகள் சுழற்சி முறையில் வழங்க முடிவு செய்யப்பட்டது. திருவிழா காலத்தில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், பாதயாத்திரை பக்தர்கள் தங்குவதற்காக முக்கிய வழித்தடங்களில் 11 நிரந்தர மண்டபங்கள் மற்றும் 43 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டன. தொடர்ந்து 48 கட்டணமில்லா குளியலறை மற்றும் கழிப்பறைகள், 28 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முனையம், 8 நிரந்தர நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத மின்தடையை எதிர்நோக்க 11 இடங்களில் நிரந்தர மின்னாக்கி மையங்களும், 4 தற்காலிக மின்னாக்கி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டன.

3 இடங்ளகளில் நிரந்தர முதலுதவி சிகிச்சை மையங்கள் 2 டாக்டர்கள் மற்றும் 8 மருத்துவ பணியாளர்களுடன் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டன. பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்வதற்காக 8 சீட்டு வழங்கும் மையங்களும், வடக்கு பிரகாரங்கள் கூடுதல் சீட்டு வழங்கும் மையங்களும் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டன. இடும்பன் குளத்தில் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 23 ஷவர் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக 7 மையங்களில் 300 பேர் பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.குற்ற சம்பவங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் 12 இடங்களில் போலீசாரால் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. பாலக்காடு, திருச்சி, தஞ்சாவூர் வழித்தடங்களில் தைப்பூச திருவிழா காலங்களில் சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினகரன் செய்தி எதிரொலியால் நடவடிக்கைகள்

தைப்பூச திருவிழா நெருங்கி வரும் நிலையில் பக்தர்களுக்கு உள்ள சிரமங்கள் குறித்து தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் புகைப்படத்துடன், விரிவான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக அதில் குறிப்பிட்டிருந்த அத்தனை குறைபாடுகளுக்கும் நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இதன்படி பாதயாத்திரை பக்தர்கள் நடந்து வருவதற்காக அமைக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் சாலையில் சேதமடைந்தவைகளை சீரமைத்து, புதர்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. பாதயாத்திரை சாலையில் இருள் சூழ்ந்த இடங்களில் குழல் விளக்கு அமைக்க அறிவுறுத்தப்பட்டது. சாலையோர உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பது, நியாயமான விலையில் விற்பனை செய்வதை உறுதிபடுத்த நகராட்சி மற்றும் உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. விலைப்பட்டியல் வைக்காத உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டது.

Related Stories: